மரக்காணம் அருகே.. கடல் நீரை உறிஞ்சிய ‘ராட்சத’ மேகம்.. ஆ! மிரண்டுபோன மீனவர்கள்.. திக் வீடியோ

மரக்காணம் அருகே கடலை திடீரென சூழ்ந்த ராட்சத மேகங்கள் அப்படியே கடலுக்குள் விழுந்து அதை உறிஞ்சி குடித்த அரிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.பருவநிலை மாறுபாடு காரணமாகவே இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதாக சூழலியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மிக அரிய நிகழ்வு என்ற போதிலும், இது சுற்றுச்சூழல் மாற்றத்தை எடுத்துக்கூறும் சமிக்ஞை என்கின்றனர் நிபுணர்கள்.

பார்க்க அழகாக இருந்தாலும், இது மிகவும் ஆபத்து நிறைந்த நிகழ்வாகும். பல நூறு கிலோமீட்டர் வேகத்தில் சுழல் ஏற்படுவதுால் அந்தப் பகுதியில் கப்பல், படகு என எது சென்றாலும் கவிழ்ந்துவிடும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மரக்காணம் அருகே உள்ள ஆலம்பாறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். சுமார் 5 கி.மீ. தூரம் வரை அவர்கள் கடலுக்குள் சென்றிருக்கின்றனர். அப்போது திடீரென வானம் இருண்டு இரவு போல மாறியது. இதனால் எச்சரிக்கையான மீனவர்கள், ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என பயந்துள்ளனர். அந்த சமயத்தில், மிகப்பெரிய ராட்சத மேகங்கள் வானில் இருந்து ஒன்றுபோல கடலில் இறங்கியுள்ளது.

கடலுக்குள் விழுந்த மேகங்கள் அடுத்த நொடியே ஒரு பெரிய சுழலாக உருவெடுத்து, கடல் நீரை அப்படியே உறிஞ்சி குடித்துள்ளன. இந்த விசித்திரக் காட்சியை கண்டு மெய்சிலிர்த்த மீனவர்கள், அதை தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். சுமார் அரை மணிநேரம் கடல் நீரை உறிஞ்சிய மேகங்கள், பின்னர் கலைந்து சென்றுவிட்டன. இந்தக் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இவ்வாறு மேகங்கள் சுழலாக மாறுவதை அறிவியல் விஞ்ஞானிகள் ‘டோரோண்டோ’ என அழைக்கின்றனர். அதாவது, கடல் மேல் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும், கடல் காற்று வெப்பகமாகவும் இருக்கும்பட்சத்தில் அதை சமன் செய்வதற்காக இந்த ‘டோரண்டோ’ சுழல் ஏற்படும். தமிழில் இந்த நிகழ்வை நீர்த்தாரைகள் எனக் கூறுகிறார்கள். இரண்டு காற்றுகளின் வெப்பநிலையும் சமமாக மாறும் வரை, இந்த ‘டோரண்டோ’ நிலைத்திருக்கும். பார்க்க அழகாக இருந்தாலும் இது மிகவும் ஆபத்தான கருதப்படுகிறது.

ஏனெனில், இந்த டோரண்டோ ஏற்படுகையில் ஒரு குறிப்பிட்ட கிலோமீட்டர் சுற்றளவு வரை அதிவேகமாக சுழல் காற்று வீசும். புயலுக்கு நிகராக காற்றின் வேகம் இருக்கும். இதனால் இந்த நிகழ்வு நடைபெறும் போது, அந்தப் பகுதியில் ஏதேனும் படகுகள், கப்பல்கள் சென்றால் சுழல் காற்று அவற்றை கவிழ்த்துவிடும். பொதுவாக, ஐரோப்பிய நாடுகளில்தான் அடிக்கடி நிலத்திலும், கடலிலும் இந்த ‘டோரண்டோ’ ஏற்படும். தற்போது இந்தியாவிலும், தமிழகத்திலும் கூட அடிக்கடி இந்த நிகழ்வுகள் ஏற்படுகின்றன. பருவநிலை மாறுபாடே இவ்வாறு டோரண்டோ ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என விஞ்ஞானிகள் கறுகின்றன.

source: https://tamil.oneindia.com/news/villupuram/tornado-happened-in-sea-near-marakkanam-as-giant-cloud-absorb-sea-water-491511.html

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *